என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜல்லிக்கட்டு காளை"
- அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
- இதையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
அலங்காநல்லூர்
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஒட்டுமொத்த தமிழர்களும் போராடி பெற்றுத்தந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் அனைத்து சமுதாய இளைஞர்கள் சார்பில் ஜல்லிக்கட்டு காளை ஒன்று வளர்த்து வருகின்றனர். இந்த காளையை அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த பூசாரி லோகு (34) பராமரித்து வருகிறார். இந்த காளை 6வயதை எட்டியுள்ள நிலையில் முனியாண்டி கோவிலில் சிறப்பு பூஜை செய்து காளைக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதுகுறித்து சங்கத்தினர் கூறுகையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒட்டுமொத்த தமிழர்களும் பங்கேற்று பெற்றுத்தந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் இந்த ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வருகிறோம். இந்த காளைக்கு கரிகாலன் என பெயர் சூட்டி ஆண்டுதோறும் மே 1-ந்தேதி பிறந்தநாள் கொண்டாடி வருகிறோம். அதேபோல இந்த ஆண்டும் காளைக்கு பிறந்தநாள் விழா நடத்தினோம் என்றனர்.
- மின்வேலியில் சிக்கி 2 ஜல்லிக்கட்டு காளைகள் இறந்தன.
- போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
காரியாபட்டி அருகே உள்ள வி கரிசல்குளம் கருப்பசாமி கோவில் அருகில் மின்வேலியில் சிக்கி 2 ஜல்லிக்கட்டு காளைகள் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் துணை மின் பொறியாளர் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது பூமி என்பவர் தனது வயல்காட்டில் உள்ள நெற்பயிர்களை காப்பதற்காக சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தது தெரியவந்தது. இதுகுறித்து சேகர் ஏ.முக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் பூமி மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தினர்.
அதில் மின்சாரம் தாக்கி இறந்த ஜல்லிக்கட்டு காளைகள் 2 நாட்களுக்கு முன்பு ஆவியூரில் நடந்த ஜல்லிக்கட்டில் மாயமான ஜெய்ஹிந்த்புரம் மாணிக்கம் மற்றும் அவனியாபுரம் கண்ணன் ஆகியோருக்கு சொந்தமான காளைகள் என்பது தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலப்பின மாடுகளே அதிக அளவில் தமிழகத்தில் உள்ளது.
- பொதுமக்களும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை பெருமைப்படுத்தும் வகையில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க வேண்டும்.
தருமபுரி:
தருமபுரி அருகேயுள்ள அ.கொல்லஅள்ளி வேடியப்பன் திட்டு பகுதியை சேர்ந்த விவசாயி சதீஷ்குமார்-பிரியங்கா, இவர்களுக்கு சென்னகேசவ பெருமாள் கோவிலில் திருமணம் நடைபெற்றது.
திருமண விழாவில் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அதிக அளவில் தமிழகத்தில் நாட்டு மாடுகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தாங்கள் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மரியாதை செய்த பிறகு திருமணத்தை நடத்தினர்.
கலப்பின மாடுகளே அதிக அளவில் தமிழகத்தில் உள்ளது. இதனால் நாட்டு மாடுகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் குறைந்த அளவே உள்ளது.
இதனை பாதுகாக்கும் வகையில் காளைகளுக்கு மரியாதை செய்த பிறகு தான் திருமணம் நடைபெற வேண்டும் என்று எங்கள் திருமணத்திற்கு முன்னதாகவே முடிவு செய்தோம்.
அதன்படி எங்கள் திருமணத்தின்போது நாங்கள் பாசமாக வளர்த்துவரும் ஜல்லிக்கட்டு காளை, பசு மாடுகளுக்கு பூமாலை அணிவித்து குங்குமத் திலகமிட்டு மரியாதை செலுத்திய பிறகு நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.
மேலும் ஒவ்வொரு விவசாயிகளும் தங்கள் விவசாயத்துடன் சேர்த்து நாட்டு மாடுகளை வளர்த்து விவசாயத்தை பெருக்கி நமது பாரம்பரியத்தை காத்திட வேண்டும்.
அதுமட்டுமின்றி இளைஞர்களும். பொதுமக்களும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை பெருமைப்படுத்தும் வகையில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிங்கம்புணரி அருகே இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு மரியாதை செய்யப்பட்டது.
- ஜல்லிக்கட்டு காளைக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உரிமையாளரின் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கிருங்காகோட்டையில் மெக்கானிக் ஜெயமணி என்பவருக்கு சொந்தமான நாச்சி காளை இருந்தது. இது தமிழக அளவில் நடைபெறும் ஜல்லிக் கட்டு பந்தயங்களில் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளது. இந்த காளை நேற்று திடீரென்று இறந்தது. ஜல்லிக்கட்டு ஆர்வ லர்கள், ரசிகர்கள், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சி யைப் போல கருதி அந்த காளைக்கு துண்டு, வேட்டி, மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தமிழக ஜல்லிக்கட்டு தமிழக ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் பி. ராஜசேகரன் உள்ளிட்ட பிரமுகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஜல்லிக்கட்டு காளைக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உரிமையாளரின் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
- பாரம்பரிய ஜல்லிக்கட்டு விழா ஆரம்பமாக இருக்கிறது.
- கடந்த 2 வாரத்தில், 8 ஜல்லிக்கட்டு காளைகள் திருடப்பட்டு உள்ளன.
மதுரை :
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பாரம்பரிய ஜல்லிக்கட்டு விழா, நடக்க இன்னும் குறைந்த நாட்களே உள்ளன. மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு ஆரம்பமாக இருக்கிறது.
அங்கு வாடிவாசலில் தங்களது காளைகளை களம் இறக்கும் நடவடிக்கைகளில் காளை உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதே நேரத்தில் மதுரை மாவட்டத்தில் கடந்த 2 வாரத்தில், 8 ஜல்லிக்கட்டு காளைகள் திருடப்பட்டு உள்ளன. முடுவார்பட்டி, கோடாங்கிபட்டி உள்ளிட்ட பாலமேடு போலீஸ் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த 4-ந்தேதி அதிகாலையில் 3 காளைகள் திருடப்பட்டனன. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளின் மூலம், 'காளை திருடர்களை' தேடிவருகின்றனர்.
இதேபோல கடந்த 8-ந்தேதி தத்தனேரியில் பொன்னம்பலராஜதுரை என்பவருக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளை திருடப்பட்டு உள்ளது.
காளைகள் களவாடப்படுவது காளை வளர்ப்பவர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே கண்ணும் கருத்துமாக காளைகளை கண்காணிக்க தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து கடந்த 4-ந்தேதி திருட்டுபோன, பாலமேடு மஞ்சமலை சுவாமி கோவிலுக்கு சொந்தமான காளையை பராமரித்து வந்த முடுவார்பட்டி அழகப்பன் கூறியதாவது:-
மஞ்சமலை சுவாமியை வழிபடும் பங்காளிகளாக சேர்ந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காளைக்கன்று ஒன்றை வாங்கினோம். அந்த கன்றை கண்ணும் கருத்துமாக, எங்கள் வீட்டு பிள்ளையைப் போல எனது பொறுப்பில் வளர்த்து வந்தேன்.
சில வருடங்களாக அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்று காளையர்களிடம் சிக்காமல் தங்கம், வெள்ளி நாணயங்கள் உள்பட எக்கச்சக்க பரிசுகளை பெற்று, மஞ்சமலை சுவாமிக்கும், எங்கள் பங்காளிகளுக்கும் அந்த காளை பெருமை சேர்த்தது. செல்லப்பிள்ளையாக காளை வளர்ந்தது. 4-ந்தேதி எங்கள் வீட்டின் முன்பு காளையை கட்டிப்போட்டு இருந்தோம். அதிகாலையில் மர்மநபர்கள் காளையின் கயிற்றை அறுத்து, திருடிச் சென்றுள்ளனர். எங்களைத்தவிர மற்றவர்கள் காளையின் அருகில் கூட செல்ல முடியாது. ஆனால் மர்மநபர்கள், மயக்க மருந்து செலுத்தியோ, அல்லது வேறு வகையிலோ காளையின் நினைவை கலைத்து, வாகனத்தில் ஏற்றிச் சென்று இருக்க வேண்டும். இதுபற்றி புகார் அளித்து உள்ளோம். எங்கள் காளை மீண்டும் எங்களிடம் வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதே நாளில் திருடப்பட்ட மற்றொரு காளையின் உரிமையாளரான கோடாங்கிபட்டி லெட்சுமி கூறியதாவது:-
சிறிய கன்றுக்குட்டி பருவத்தில் இருந்து வளர்த்து வந்தோம். எங்கள் குலதெய்வத்தின் பெயர் முத்தையன் என்பதை காளைக்கு வைத்து, ஆசை ஆசையாக அழைப்போம். முத்தையா... என்ற சத்தத்தை கேட்ட உடன், அளவு கடந்த பாசத்தை வெளிப்படுத்தும். எங்கள் குடும்பத்தினர் முத்தையன் மீது உயிருக்கு உயிராக இருந்தோம்.எங்கள் வீடு சாலையோரமாக உள்ளது. ஏராளமான மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் எங்கள் முத்தையன் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளான். இதுவரை யாரிடமும் பிடிபட்டதில்லை. எங்களைத்தவிர, வெளிநபர்கள் யாரும் நெருங்கக்கூட முடியாது. கடந்த 4-ந்தேதி இரவு 11.30 மணி அளிவில்தான் காளையை கடைசியாக பார்த்துவிட்டு துங்கினோம். சில மணி நேரம் கழித்து பார்த்தபோது காணவில்லை.3 நாட்களுக்கும் மேலாக காளையை எல்லா பகுதியிலும் தேடினோம். எங்கும் கிடைக்கவில்லை. இதனால் எங்கள் குடும்பமே சோகத்தில் உள்ளது. காளையின் நினைப்பாகவே உள்ளது. முத்தையன் மீண்டும் எங்களிடம் வந்து சேருவான் என்ற நம்பிக்கையில் உள்ளோம். அதுவரை எங்களால் நிம்மதியாக சாப்பிடவோ, தூங்கவோ முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
காரணம் என்ன?
மாணவர்கள், இளைஞர்கள் ஒன்றுதிரண்டு தமிழக அளவில் நடத்திய போராட்டங்களுக்கு பிறகு ஜல்லிக்கட்டு மீண்டு வந்துள்ளது. எனவே கடந்த 2017-ம் ஆண்டுக்குப்பின் ஜல்லிக்கட்டு காளைகளின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துவிட்டது. அதாவது, சில ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு காளைகள் கை மாறின. தற்போது லட்சக்கணக்கான ரூபாய் என அவை மதிப்பிடப்படுகின்றன. இதுவும் மர்மநபர்கள் காளைகளை திருடுவதற்கு ஒரு காரணம். சிலர் ஜல்லிக்கட்டு காளை மோகத்தின் காரணமாகவும் அவற்றை திருடலாம். களத்தில் பரிசு வென்ற காளையை திருடி கைமாற்றினால், அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசையிலும் இவ்வாறு வாயில்லா ஜீவன்களுக்கு வஞ்சகம் செய்கின்றனர்.
மொத்தத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் மதிப்பு மிக்க பொருளாக பார்க்கப்படுகின்றன. இதனால்தான் ஜல்லிக்கட்டு தொடங்க உள்ள நேரத்தில் தொடர்ச்சியாக காளைகள் திருடப்படுகின்றன. சாலையோரங்களில் கட்டிப்போடப்பட்டு இருந்த காளைகள்தான் திருடப்பட்டு உள்ளன. எனவே பாதுகாப்பான இடங்களில் அவை பராமரிக்கப்படும்பட்சத்தில் திருட்டு சம்பவங்கள் தடுக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
- மேலூர் அருகே இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
- ஊர்வலமாக எடுத்துச்சென்று பெரிய கண்மாய் அருகே காளையை அடக்கம் செய்தனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சேக்கிபட்டியில் முத்தாலம்மன் கோவிலுக்கு சொந்தமான கோவில் காளை உள்ளது. இந்த காளை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்பட பல ஊர்களில் நடைபெற்ற பிரபலமான மஞ்சுவிரட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது. இந்த நிலை உடல்நலக்குறைவு காரணமாக காளை நேற்று இரவு இறந்தது.
இதையடுத்து அந்த காளைக்கு ஜாதி மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று பெரிய கண்மாய் அருகே காளையை அடக்கம் செய்தனர்.
மணிகண்டத்தை சேர்ந்தவர் பழனியாண்டி(வயது 50). விவசாயியான இவர் சிறுவயதில் இருந்தே மாடுபிடி வீரராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 10 வருடத்திற்கு முன்பு ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வாங்கி அதற்கு செவளக்காளை என்று பெயரிட்டு அன்பாக வளர்த்து வந்தார். அந்த காளை, புகழ்பெற்ற அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு, தென்னலூர், சூரியூர் உள்பட பல்வேறு ஜல்லிக்கட்டுகளில் பங்கு பெற்று மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் தங்கம், வெள்ளி நாணயங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்பட பரிசுளை பெற்று உள்ளது. கடைசியாக நவலூர்குட்டப்பட்டு ஜல்லிக்கட்டில் களம் இறங்கி அடக்க முடியாத காளையாக பரிசு பெற்றது. இந்த காளையை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மதுரையை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர் ஒருவர் ரூ. 15 லட்சத்திற்கு கேட்டார். ஆனால் காளையின் உரிமையாளர் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் செவளக் காளைக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அந்த காளைக்கு கால்நடை மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளித்தும் நேற்றுமுன்தினம் இரவு பரிதாபமாக இறந்தது. இதைபார்த்த காளையின் உரிமையாளர் பழனியாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் காளையை கட்டிப்பிடித்து கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வந்து அந்த காளைக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அந்த காளை தாரை, தப்பட்டை, வாண வேடிக்கைகள் முழங்க, பழனியாண்டி வீட்டின் அருகே பொக்லைன் எந்திரத்தின் மூலம் குழிதோண்டி அதில் காளையை அடக்கம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்